விருத்தாசலம் அருகே விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 40க்கு மேற்பட்டோர் படுகாயம்!

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:



சென்னை: சென்னை-மங்களூர் விரைவு ரயில் இன்று அதிகாலை விருத்தாச்சலம் அருகே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து மங்களூர் சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென இந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 19 பெண்கள், ஒரு சிறுமி உள்பட40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே ஊழியர்களும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஒட்டக்கோவிலிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் செந்துறை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதே போல், பொதிகை எக்ஸ்பிரஸ் தாளா நல்லூரிலும், ,கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஈச்சங்காட்டிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் மாத்தூரிலும் நிறுத்தப்பட்டன.
விபத்து நடந்து பல மணி நேரத்திற்கு பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற அனைத்துப் பெட்டிகளுடன் மங்களூர் விரைவு ரயில், மங்களூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த மார்க்கத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில், ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து காரணமாக ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டு இருந்த ரயில்களும், ஒவ்வொன்றாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், மீட்பு பணிகளை துரிதப்படுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே, தாமதமான ரயில்களின் விவரங்களை பயணிகள் அறிந்துகொள்ளசென்னை-044-29015203, திருச்சி-9003864692, விழுப்புரம்–9443644923, விருத்தாசலம்–04143– 263767 என்ற உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேலும், பயணிகளுக்கு உதவ எழும்பூரில் அவசரகால உதவி கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில், ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்கள், காலதாமதம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
- க.பூபாலன்
vikatan
படங்கள்: எஸ்.தேவராஜ்
த.எழிலரசன், மு.ஜெயராஜ்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)


0 comment(s) to... “விருத்தாசலம் அருகே விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 40க்கு மேற்பட்டோர் படுகாயம்!”