பட்டுக்கோட்டையில் தரைக்கடை நடத்த அனுமதிகேட்டு தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.சாலை ஓர வியாபாரிகளுக்கு 2014ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் சட்டப்படி சான்றிதழ் வழங்க வேண்டும். பல ஆண்டு காலமாக தள்ளுவண்டி,
தரைக்கடை வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாக அப்புறப்படுத்தக் கூடாது. வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காசாங்குளம் கீழ்கரையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஏஐடியுசி சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்ட தெரு வியாபாரிகள், தொழிலாளர்கள் சங்க பட்டுக்கோட்டை நகரத் தலைவர் லாராமுத்துமாரி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் பக்கிரிசாமி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 150க்கும் மேற்பட்ட தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நன்றி தினகரன்