அதிரை அருகே கடைமடை பகுதி ஏரிகளில் நீர் குறைவதால் பாசன விவசாயிகள் கவலை
Posted January 08, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ளசேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கடைமடை பகுதிகளான நாடியம், ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், கொரட்டூர் போன்ற பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மழையின்றி ஏரிகள் நிரம்பாமல் ஏரிப்பாசன சாகுபடி நடைபெறவில்லை. அதேசமயம் இந்த ஆண்டு போதுமான மழை பெய்து ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனை நம்பி ஏரி பாசன விவசாயிகள் சாகுபடி பணிகளை கடந்த 15 தினங்களாக மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சாகுபடி பணிகள் தொடங்கிய நாள்முதலே கடைமடை பகுதியில் மழை ஓய்ந்தது. இதனால் ஏரிகளில் உள்ள தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. தண்ணீரை கணக்கில் கொண்டு ஏரி பாசன பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மத்திய கால ரகங்களையே தேர்ந்தெடுத்துள்ளனர். மத்திய கால ரகமாக இருந்தாலும் அறுவடைக்கு 120 முதல் 130 நாட்கள் ஆகும். தற்போது சாகுபடி செய்யக்கூடிய பயிர்களுக்கு குறைந்த பட்சம் ஏரிகளில் மார்ச் மாத இறுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் மழையின்றி இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு மாத காலத்தில் ஏரி தண்ணீர் குறைந்துவிடும். மேலும் நேரடி பாசன பகுதிகளில் பயிர், சூல்பிடிக்கும் பருவம், கதிர் பருவம் என பல்வேறு பருவங்களில் பயிர்கள் உள்ளன. மேட்டூர்அணையிலிருந்து இன்னும் 45 நாட்களுக்கு பிப்ரவரி 15 வரை தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நேரடி பாசன பயிர்கள் பல்வேறு நிலைகளில் உள்ளதால் மேட்டூர்அணை தண்ணீரின் ஒரு பகுதியை ஏரிகளுக்கு வழங்கி ஏரிகளில் தண்ணீர் குறையாமல் இருக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஏரி பாசன சாகுபடி முழுமையாக கைக்கு கிடைக் கும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகே கடைமடை பகுதி ஏரிகளில் நீர் குறைவதால் பாசன விவசாயிகள் கவலை”