மானிய விலையில் 5 கிலோ சிலிண்டர் ஏஜென்சிகளில் கிடைக்கும்

Posted January 06, 2015 by Adiraivanavil in Labels:
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காக மானிய விலையிலான 5 கிலோ காஸ் சிலிண்டர் திட்டத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்தார்.ஷாம்பூ பாக்கெட் மலிவு விலையில் கிடைப்பதுபோல், காஸ் சிலிண்டர்களும் சிறிய அளவில் மானியத்துடன் விற்பனை செய்வதை ஊக்குவிப்பது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி மானியத்துடன் கூடிய 5 கிலோ சிலிண்டர்கள் ஏழை மக்களுக்கு, குறிப்பாக குடிசைப்பகுதியில் இருப்பவர்களுக்கு எளிதில் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், “மானிய விலையில் 5 கிலோ சிலிண்டர் வழங்குவததன் மூலம், ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் அல்லது 5 கிலோ எடையுள்ள 35 சிலிண்டர்கள் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த எண்ணிக்கைக்கு மேல் சந்தை விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காக 5 கிலோ சமையல் காஸ் விநியோகத்தை ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தர்மேந்திர பிரதான் நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “இந்த சிலிண்டர் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும். ஊரக பகுதிகளில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரை டெபாசிட் தொகை இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறினார்.
வீட்டு உபயோகத்துக்காக 14.2 கிலோ காஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல் வர்த்தக உபயோகத்துக்காக 19 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. 14.2 கிலோ சிலிண்டர் சென்னையில் மானியத்துடன் ரூ.404.50 ஆகவும், டெல்லியில் ரூ.417 ஆகவும் உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர் சென்னையில் டெல்லியில் 708.50 ஆகவும், சென்னையில் ரூ.705 ஆகவும் உள்ளது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மானிய தொகை மாற்றி அமைக்கப்பட்ட நேரடி மானிய திட்டம் மூலம் கடந்த 1ம் தேதி முதல் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.
வேலை காரணமாக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், குடிசைப்பகுதி மக்கள், இடம்பெயர்ந்தவர்கள் வசதிக்காக 5 கிலோ சிலிண்டர் விற்பனை கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூரில் கடந்த அக்டோபர் 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் டெல்லி, ஐதராபாத் நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், சில காஸ் ஏஜென்சிகள், பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் காஸ் ஏஜென்சிகளில் 5 கிலோ சிலிண்டர் கிடைக்கும். சென்னையில் மானியமற்ற 5 கிலோ சிலிண்டர் விலை ரூ. 404ஆக உள்ளது. மானியத்துடன் கூடிய 5 கிலோ சிலிண்டர் ரூ.151க்கு கிடைக்கும்.
நன்றி தினகரன் 


0 comment(s) to... “மானிய விலையில் 5 கிலோ சிலிண்டர் ஏஜென்சிகளில் கிடைக்கும்”