முத்துப்பேட்டை வனப்பகுதியில் சமீபக்காலமாக பறவை வருகை அதிகரித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வெளி நாட்டு பறவைகள் முகாமிட்டு தங்கி இனம் பெருக்கம் செய்து வருகிறது. அதேபோல் அதனை வேட்டையாடும் கும்பலும் அதிகளவில் உள்ளன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி பறவைகளை வேட்டையாடும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் குற்றம் குறையவில்லை. இந்த நிலையில் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை
பகுதியில் ஒரு நபர் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக வனத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து திருச்சி மண்டல வனக்காப்பாளர் கருணை பிரியா, திருவாரூர் மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை கூடுதல் வன சரக அலுவலர் ராதாகிருஷ்ணன், வனவர் அயூப் கான், வனக்காவலர்கள் சிவனேசன், மாரிமுத்து, வேட்டை தடுப்பு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு தம்பிக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறம் பகுதியில் வசிக்கும் சேக்காதி மகன் இலியாஸ் என்பவர் சந்தேகத்துக்கிடமாக நின்றதால் அவரை பிடித்து விசாரித்து சோதனையிட்ட பொழுது இரண்டு சிறவி இன பறவைகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் பகுதியில் உள்ள வயல் வெளியில் கன்னி வைத்து பிடித்திருப்பது தெரிந்தது. உடன் இலியாஸ் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட பறவைகளை வனப்பகுதியில் பறக்க விடப்பட்டது. இது குறித்து வனவர் அய்யூப்கான் கூறுகையில்: இது போன்ற செயல்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடியும,; கன்னி வைத்தும், ஆயுதங்களை வைத்து பிடிப்பதும், அதனை விற்பனை செய்வதும், அதை வாங்குவதும் இந்திய வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படி கண்டிக்கத்தக்க கடுமையான குற்றமாகும் அதனால் இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுப்பட வேண்டாம். மீறுப்பவர்கள் கடுமையாக தண்டனைக்கு ஆளாக்கப்படுவீர்கள் என்று எச்சரிப்பதாக கூறினார்.
நன்றி
படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை