காய்ச்சல், உடல் வலிக்கு மருத்துவமனைகளையே அணுக வேண்டும்'

Posted October 22, 2014 by Adiraivanavil in Labels:
காய்ச்சல், உடல் வலி, இதர நோய்களுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டம் முழுவதும் 493 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல், முதிர்ந்த கொசுக்களை
அழித்தல், பொதுமக்களுக்கு நலக் கல்வி அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விவரம் சேகரிக்கப்படுகிறது. இவர்களுக்கு உரிய சிகிச்சை மருத்துவர் மூலமாக அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், காய்ச்சல் பாதித்த கிராமங்களில் பொது சுகாதாரத் துறையில் உள்ள நடமாடும் மருத்துவக் குழுக்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றன.
மருந்துகள், அழகுசாதன பொருள்கள் சட்டப்படி டைக்ளோபினாக், புரூபன், ஆஸ்பிரின், ஸ்டீராய்ட்ஸ் போன்ற மருந்துகளை மருத்துவர்களின் மருந்து சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் தண்டனைக்குரியது. மீறுபவர்கள் மீது சட்டப்படி ஒரு குற்றத்துக்கு ரூ. 20,000 அபராதத்துடன் குறைந்தபட்சம் ஓராண்டும், அதிகபட்சம் மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மருந்தகங்களில் காய்ச்சல், உடல் வலி, இதர நோய்களுக்காக வரும் பொதுமக்களுக்கு மருந்தாளுநர்கள், இதர நபர்கள் ஊசி போடுதல், தாமாக மாத்திரை வழங்குதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றம். எனவே, இந்தச் செயல்களில் தகுதியற்ற நபர்கள் ஈடுபட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வலி நிவாரணிகள், ஸ்டீராய்ட்ஸ் போன்ற மாத்திரைகளைக் காய்ச்சல் போன்றவற்றுக்குத் தாமாக எடுத்துக் கொள்ளும்போது ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உதிரப்போக்கு ஏற்பட்டு, இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி போன்ற காரணங்களுக்காகச் சுயமான மருந்து உட்கொள்வதையும், தகுதியற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கும் நபர்களிடம் ஆலோசனை, சிகிச்சை பெறுவதையும் தவிர்த்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். நன்றி தினமணி 


0 comment(s) to... “காய்ச்சல், உடல் வலிக்கு மருத்துவமனைகளையே அணுக வேண்டும்'”