பேராவூரணி பகுதியில் அரசு கலைக்கல்லூரியை அமைக்ககோரி ஆர்ப்பாட்டம்

Posted October 15, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி, அக். 15–
பேராவூரணி அரசு கலைக்கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்க வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிற்பட்டோர் நலமாணவர் விடுதியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக பேராவூரணி அண்ணாநகர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் அரசு அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.இந்நிலையில் அறநிலையத் துறையிலிருந்து இடத்தை கல்லூரிக்கு பெறுவதில் நிர்வாக சிக்கல்கள்
இருப்பதாக கூறி பேராவூரணியிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள சமத்துவபுரம் அருகே விவசாய நிலத்தில் கல்லூரி கட்டுவதற்காக அரசு அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
பேராவூரணி நகரில் இல்லாமல் கிராமப்பகுதியில் கல்லூரி அமைந்தால் மாணவர்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும் அரசு கல்லூரியில் பெரும்பாலும் மாணவிகள் பயின்று வருவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படும். எனவே கிராமப்பகுதிக்கு மாற்றாமல் அறநிலையத்துறைக்கு சொந்தமான பேரூராட்சி பகுதியிலேயே கல்லூரியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் புரட்சிக்கழக நகரச் செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச் சுடர் நா.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வழக்குரைஞர் கருப்பையா, ஆர்.எஸ். வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் த.கலைச் செல்வன், முனைவர் ஆ.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “பேராவூரணி பகுதியில் அரசு கலைக்கல்லூரியை அமைக்ககோரி ஆர்ப்பாட்டம்”