முத்துப்பேட்டை அருகே பட்டாசு வெடிப்பதில் மோதல்: பெண் அடித்துக்கொலை
Posted October 23, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, அக். 23–
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்த கைலாசம் என்பவரின் மகன்கள் சந்திரசேகரன், மந்திரமூர்த்தி. இவர்கள் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து வந்தனர்.
இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கிரிதரன் என்பவர் பொதுஇடத்தில் இதுபோன்று வெடிவெடிக்கக்கூடாது என அவர்களிடம் கூறியுள்ளார். இதனால்
ஆத்திரம் அடைந்த அவர்கள் கிரிதரனை தாக்கியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் இதுகுறித்து தனது தாய் ராஜேஸ்வரி, அண்ணன் அரவிந்திடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கிரிதரனை அழைத்து கொண்டு கைலாசத்தின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அதற்கு கைலாசம் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கைலாசம் அவரது மகன்கள் சந்திரசேகரன், மந்திரமூர்த்தி, கிருஷ்ணகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் கட்டை மற்றும் கம்பியால் அவர்கள் 3 பேரையும் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் கிரிதரன் அளித்த புகாரின் பேரில் கைலாசம், சுப்பிரமணியன், சந்திரசேகரன், மந்திரமூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், கிருஷ்ணகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பட்டாசு வெடிப்பதில் மோதல்: பெண் அடித்துக்கொலை”