தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்
Posted October 22, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து, வண்ணமயமான பட்டாசுகளுடன், தித்திக்கும் இனிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும்.தற்போதைய காலத்தில் இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் ஆர்வத்துடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இந்த தீபாவளி எவ்வாறு வந்தது என்பதற்கு வரலாற்று கதைகள் உண்டு என்பதை பலருக்கு அறிந்திருக்க
வாய்ப்பில்லை.
1.ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் சீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்தார். அப்போது மக்கள் தீப விளக்கு ஏற்றி வரவேற்று மகிழ்ந்தார்கள், இத்தினமே தீபாவளியாக அமைந்தது என்று கூறப்படுகின்றது.
2. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை பரமசிவனின் திருமுடியில் தங்கியது. கங்கை வேகம்தணிந்து பூலோகத்தில் பாய்ந்த தினம் தீபாவளி எனப்பட்டது.
3. ஆறுமுகன் ஆறு பொறிகளிலிருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவன் அவனை உடம்பிலுள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், ஏற்றி வழிபடுவதன் புறவடிவமே தீபாவளி என கௌமார மார்க்கத்தினர் கூறி வழிபடுகின்றனர்.
4. இந்தியாவில் வங்காள மக்கள் தீபாவளியன்று காளி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற்கொண்ட காளிதேவியின் தணியாத உக்கிரத்தை ஆதிசங்கரர் ஒரு தீபாவளி தினத்தன்று தான் தணித்தார் என கூறப்படுவதுண்டு.
5. சமண சமயத்தைத் தொடங்கிய மகாவீரர் வர்த்தமானர் ஒரு தீபாவளியன்று மக்களுக்கு அருளுரை செய்து கொண்டிருக்கும் போதே முக்தி பெற்றார். அருளுரை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அவர் இறந்ததையறிந்து தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.
6. இன்று அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூபன் என அழைக்கப்படுகின்ற பிரக்ஜோதி புரத்தை ஆண்டு வந்த பூமாதேவியின் புதல்வன் பௌமன் என்பவன் அருந்தவம் செய்து பிரமனை வழிபட்டு பெரும் வரங்களைப் பெற்றான். இதனால் தேவர்கள், முனிவர்கள் என்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தான்.
உலகத்தை நரக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தமையால் இவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரனும் இதர முனிவர்களும் இவனது கொடுமைகள் தாங்காது கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தனர். கிருஷ்ண பகவான் சத்தியபாமாவின் துணையுடன் நரகாசுரனை வதம் செய்தார்.
அப்போது நரகாசுரன் கிருஷ்ணபவானை வணங்கி நான் செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்வதுடன் கொடியவனாகிய நான் இறக்கும் இத்தினத்தை மக்கள் அனைவரும் மங்களகரமான நாளான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இத்திருநாளே பரவலாகப் பெரும்பாலான மக்களால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவர். முதலாம் நாள் சோட்டா தீபாவளி என்று சிறிதாக கொண்டாடுவர். மறுநாள் படா தீபாவளி என்று விமரிசையாக கொண்டாடுவர். மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை செய்து கண்ணனைப் பிரார்த்தனை செய்வார்கள். அன்று லட்சுமியை வழிபட்டு புதுக்கணக்கு தொடங்குவது அவர்கள் வழக்கமாகும்.
7. திருமால் மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனைப் பாதாள உலகில் வாழச் செய்தார். மகாபலி ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே பூமிக்கு வந்து போக அருள் செய்யும் படியும் அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படியும் திருமாலிடம் வரமாகப் பெற்றான்.
அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தீபாவளி கிருஷ்ணா அவதாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது என்பது பல புராணக் கதைகள் மூலம் தெரியவருகிறது. பிற்காலத்தில் நரகாசுரன் கதையும் தீபாவளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. news kathiravan
0 comment(s) to... “தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? சுவாரஸ்யமான கதைகள்”