கொல்கத்தா - மேற்கு வங்க மாநிலத்தில் பெய்த கனமழைக்கு
பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்கு உள்ளானது. மேற்கு வங்க மாநிலத்தில்
கடந்த சில நாட்களாக கன மவை பெய்தது. வரலாறு காணாத மழையால், எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிடங்கள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. கனமழைக்கு 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. கனமழைக்கு இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். 7.68 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கனமழைக்கு 13 லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிப்புக்குள்ளாகியது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகிவிட்டன. ஆடு மாடு என 22 ஆயிரத்து 761 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,704 முகாம்களில் 3.15 லட்சம் பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
750 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழஹ்கவும், சேதத்துக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.