கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி -பரபரப்பு!

Posted August 22, 2015 by Adiraivanavil in Labels:


நாகர்கோவில்: பல கோடி ரூபாய் நோட்டுக்களுடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியால் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பல கோடி ரூபாய் நோட்டுகள் புதியதாக அச்சடிக்கப்பட்டு, 3 கண்டெய்னர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கண்டெய்னர் லாரிகளின் முன்னும், பின்னும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக வேன்களில் வந்து கொண்டிருந்தனர். மைசூரில் இருந்து நெல்லை வழியாக வந்த கண்டெய்னர் லாரிகள், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்து.
அப்போது, ஒரு கண்டெய்னர் லாரியின் குறுக்கே திடீரென ஆடுகள் திமுதிமுவென ஓடின. அந்த ஆடுகள் மீது மோதாமல் இருக்க, டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை திருப்பி உள்ளார். இதில் கண்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியபடி, அதே வேகத்தில் அருகில் இருந்த குளத்திற்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கண்டெய்னர் தனியாகவும், லாரி என்ஜின் பகுதி தனியாகவும் கழன்று கண்டெய்னர் தலைக்குப்புற குளத்திற்குள் கவிழ்ந்தது. கண்டெய்னரில் பல கோடி ரூபாய் பணம் இருந்ததால் உடனே பாதுகாப்புக்கு சென்ற துணை ராணுவ படையினர் துப்பாக்கியை ஏந்தியபடி பாதுகாப்புக்காக நின்றனர். அதே நேரம், கவிழ்ந்த லாரியுடன் வந்த மற்ற 2 லாரிகளும் பாதுகாப்புடன் அங்கு நிற்காமல் நேராக திருவனந்தபுரம் சென்றது.
உடனே இந்த விபத்து குறித்த தகவல் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாருடன் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது, பணத்துடன் குளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து, அந்த லாரியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர். இதையடுத்து, மகேந்திர கிரியில் இருந்து மேலும் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும், போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லாரி அருகே யாரையும் செல்லவிடாமல் அரண் போல் நின்று கண்காணித்தனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தபோதிலும் உடனே குளத்தில் இருந்து லாரியை மீட்க முடியாததால் திருவனந்தபுரத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், மீட்பு பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் இரவாகி இருட்டிவிட்டதால் அங்கு சுற்றி ஜெனரேட்டர் வைக்கப்பட்டு மின் விளக்குகள் எரியவிடப்பட்டு தொடர்ந்து ராட்சத கிரேன்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றது.

ஆனாலும் லாரியையும், கண்டெய்னரையும் குளத்தில் இருந்து வெளியே மீட்க முடியாததால், கேரளாவில் இருந்து 3 கண்டெய்னர் லாரிகள் வரவழைக்கப்பட்டு குளத்தில் கிடந்த லாரியில் இருந்த பணப்பெட்டிகள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டு ஏற்றப்பட்டன. இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி விடிய விடிய நடைபெற்றது. காலை 7 மணி வரை நடைபெற்ற இந்த பணியில் கண்டெய்னர் லாரியில் இருந்த 220 பணப் பெட்டிகளை 3 லாரிகளிலும் ஒருவழியாக மீட்பு பணியாளர்கள் ஏற்றினார்கள்.

அதன் பிறகு பணம் ஏற்றப்பட்ட 3 லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு புறப்பட்டுச் சென்றது. அதை தொடர்ந்து குளத்தில் இருந்து கண்டெய்னரும், லாரியும் மீட்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக நாகர்கோவில்–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
நன்றி விகடன் 

படங்கள்: ரா.ராம்குமார்


0 comment(s) to... “கட்டுக்கட்டாய் பணத்துடன் குளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி -பரபரப்பு!”