முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை காலணி தெரு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் செந்தில்(34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பன்னீர் செல்வம், முள்ளையம்மாள் தம்பதியின் மகளான குணசெல்வி(32) என்பவருக்கும் 13 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இருவரும் வௌ;வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ரூபன்(12) என்ற மகனும், ராதிகா(5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் செந்தில் டெம்போ டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். மேலும் செந்தில் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு குடி போதையில் மனைவிடம் தகராறு செய்து அடித்து வந்துள்ளார். பல முறை செந்திலை. மனைவியும் மாமியாரும் உறவினர்களும் கண்டித்துள்ளனர். ஆனாலும் செந்தில் குடிபோதையில் தகராறு செய்வதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்ற செந்தில் தனது மனைவி குணசெல்வியையும், மாமியார் முள்ளையம்மாளையும் குடிபோதையில் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார் முள்ளையம்மாள் கட்டையால் மருமகன் செந்திலை தாக்கினார். பின்னர் மயங்கிய விழுந்த செந்திலை வீட்டில் இருந்த மண்ணன்னையை எடுத்து ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் செந்தில் சத்தமிட்டு உயிருக்கு போராடினார். உடன் அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே செந்தில் இறந்தார். இது குறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் முள்ளையம்மாளை கைது செய்து செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாமியார் முள்ளையம்மாள் 'தனது மருமகன் செந்தில் அடிக்கடி குடிபோதையில் மகளிடமும் தன்னிடமும் தொடர்ந்து தகராறு செய்து துன்புறுத்தி வந்தார். பல முறை புத்தி மதி சொல்லியும் திருந்தவில்லை. இதனால் பெரும் அவமானம் பட்ட நான் தற்கொலை செய்துக் கொள்ள மண்ணனையை எடுத்துக் கொண்டு முயற்சித்தேன். கடைசி நேரத்தில் நாம் ஏன் சாகவேண்டும். நாம் செத்தாலும் இவன் திருந்த மாட்டான் பிறகு நமது பிள்ளைகள் அனாதையாக நிற்கும். அதனால் மருமகனையே கொலை செய்ய முடிவு செய்து தீ வைத்து கொன்றேன்' என போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை