அதிரையில் ஜொலிப்பில் கார்த்திகை அகல் விளக்குகள்(படங்கள்இணைப்பு)
Posted December 05, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையில் கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கார்த்திகையைப் பெரிய கார்த்திகை என்பார்கள். மழைக் கால முழு நிலவின் ஒளி, மொழியின் சொற்கள் தோற்றுப்போகும் தருணங்களில் ஒன்று. அந்த ஜொலிப்பில் ஆயிரம், லட்சம் ஒளிப்பொட்டுகளாக அகல் விளக்குகள் வீடுவீடாக, தெருத்தெருவாக முடிவில்லாமல் நீண்டுகொண்டேயிருக்கும். தொன்மையிலும், எளிமையின் வசீகரத்திலும், கண்கொள்ளா விரிவிலும் கார்த்திகைக்கு
ஈடாக மற்றொரு விழாவைச் சொல்ல இயலாது. கார்த்திகை நாளிலும், அதற்கு முதல் நாளும் மறுநாளும் மூன்று நாட்கள் வீட்டிலும் திண்ணையிலும் வாசலிலும் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பர்கள். நிறை நிறையாக ஒளிரும் அகல்கள் மீன் பூத்த வானம் தரைக்கு வந்ததுபோல் இருக்கும்.
முன்னிருட்டுக் காலம் கார்த்திகை. பொழுது சாய்ந்த மசண்டையில் (அந்திப்பொழுது) வீட்டில் குத்துவிளக்கேற்றிப் பழம், பாக்கு வெற்றிலை வைத்து, தேங்காய் உடைத்துச் சாமி கும்பிடுவார்கள். கார்த்திகைப் பொரியும், சில வீடுகளில் அப்பமும் படையலாக இருக்கும். பச்சை அவலில் வெல்லம், தேங்காய் கலந்து படைப்பதும் உண்டு. அங்கிருந்து அகல் விளக்குகளை ஏற்றி வீட்டு நிலைப்படிகளின் இரு பக்கமும் வைத்திருப்பார்கள். திண்ணைக் குறடும் தெருவாசலும் அகல்களால் அலங்கரித்திருக்கும். அடுப்பு, அரிசிப்பானை, உப்புமரவை, தவிட்டுக்கூண்டு, மாட்டுக்கொட்டில், கிணற்றடி, குப்பைக்குழி இவற்றிலும் தவறாமல் ஒரு அகல் விளக்கு எரியும். அன்று வீட்டுக்கு வரும் லட்சுமி இங்கெல்லாம் தங்கித் துலங்க வேண்டுமென்று பெண்கள் வேண்டிக்கொள்ளும் மரபு. உப்பும் தவிடும் குப்பையும்கூட திருமகள் தங்குமிடமாகப் பார்க்கும் கலாச்சாரத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள தற்காலத்தில் இயலாது. உப்பும் தவிடும் அரிசியும் தண்ணீரும் புது வீடு குடிபோகும்போது உடன் கொண்டுசெல்லும் பொருட்களாக இருப்பதை நினைத்துக்கொள்ள வேண்டும். குடிபுகுவதற்கு கார்த்திகை மாதத்துக்காகக் காத்திருப்பர்கள். அவ்வாறே வீட்டில் புது அடுப்பு கட்டுவதும் இந்த மாதத்தில்தான்.

0 comment(s) to... “அதிரையில் ஜொலிப்பில் கார்த்திகை அகல் விளக்குகள்(படங்கள்இணைப்பு)”