அதிரை அருகேபொதுஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Posted December 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இறைவழிபாடு மற்ற கோவில்களை விட வித்தியாசமானது ஆகும். பகலில் இந்த கோவிலில் நடை திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு திங்கட்கிழமையும் (சோமவாரம்) 2-வது சாமத்தில் இக்கோவில் நடைதிறக்கப்படும். அப்போது இறைவனை முறைப்படி வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி வாழ்க்கையில் உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம். இக்கோவிலில்
மற்ற சோமவாரங்களை காட்டிலும் கார்த்திகை மாத கடைசி சோமவாரம் மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை சோமவார திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் கடைசி சோமவார திருவிழா நடைபெற்றது. விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு பொதுஆவுடையா£ருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
விழாவில் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் உள்ளே இருந்த தல விருட்சமான ஆலமரத்தில் உள்ள இலைகளை பொதுமக்கள் பறித்து சென்று, அதை ஆடு, மாடுகளுக்கு கொடுத்தால் கால்நடைகளை எந்த நோயும் தாக்காது என நினைத்து மக்கள் ஆலமரத்தின் இலைகளை பறித்து சென்றனர். கோவிலின் வடக்கு பக்கத்தில் ஆடு, மாடு, தென்னங்கன்றுகள், நெல், பயிறு, உளுந்து போன்ற தானியங்களை பொது மக்கள் நேர்த்திக்கடனாக வழங்கினர்.
தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோவிலின் மேற்கில் ஓடும் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடியது. இதனால் திருவிழா களை கட்டியது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் 2 இடங்களில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கட்டணம் இல்லாத வழி, சிறப்பு கட்டணம், வி.ஐ.பி. வழி என 3 வழிப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சோமவார திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக அரசு சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, வேதாரண்யம், மன்னார்குடி போன்ற நகரங்களிலிருந்தும், மற்ற ஊர்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விடையாற்றி, உற்சவ விழா
சோமவார திருவிழாவையொட்டி கோவிலில் சாமி தரிசனத்துக்கு முன்பு பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) விடையாற்றி, உற்சவ விழா நடக்கிறது. விழாவில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர், மின்சாரம், கழிவறை, போன்ற வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழா ஏற்ப்பாடுகளை பரம்பரை அறங்காவலர் எஸ்.சடகோபராமானுஜம், எஸ்.ஆர்.ராமானுஜம், கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் பரக்கலக்கோட்டை கிராமமக்கள் செய்து இருந்தனர். 
0 comment(s) to... “அதிரை அருகேபொதுஆவுடையார் கோவிலில் கடைசி சோமவார திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்”