குழந்தை உருவத்தில் பிறந்த 2 அதிசய ஆட்டுக்குட்டிகள்

Posted December 23, 2014 by Adiraivanavil in Labels:
குழந்தை உருவத்தில் 2 ஆட்டுக்குட்டிகள் பிறந்த அதிசய சம்பவம் எச்.டி.கோட்டை அருகே நடந்து உள்ளது. ஆனால், அந்த ஆட்டுக்குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக செத்தன.

அதிசய ஆட்டுக்குட்டிகள்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சொல்லேபுரா கிராமத்தின் அருகே பசவனகிரி பகுதியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்ற விவசாயி தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து ஏராளமான ஆடுகள் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், அவர் வளர்த்து வந்த ஒரு ஆடு நேற்று அதிகாலையில் 5 குட்டிகளை ஈன்றது. அதில் 2 குட்டிகள், குழந்தை உருவத்தில் இருந்தன. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அதிசய ஆட்டுக்குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

செத்தன

ஆனால் அந்த ஆட்டுக்குட்டிகள், பிறந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக செத்தன. அந்த ஆட்டுக்குட்டிகளின் உடல்கள் அருகே தாய் ஆடு சோகத்துடன் படுத்து கிடந்தது. இது பார்த்தவர்களின் கண்களை குளமாக்கியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் 2 ஆட்டுக்குட்டிகளின் உடல்களையும் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வளர்ச்சி குறைவு காரணமாக ஆட்டுக்குட்டிகள் குழந்தையை போன்று பிறந்து இருக்கலாம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அதற்கான சரியான காரணத்தை கூற முடியும்’ என்றனர்.

சோகம்

குழந்தை உருவத்தில் பிறந்த 2 ஆட்டுக்குட்டிகள் சிறிது நேரத்திலேயே செத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது



நன்றி தினத்தந்தி


0 comment(s) to... “குழந்தை உருவத்தில் பிறந்த 2 அதிசய ஆட்டுக்குட்டிகள் ”