பட்டுக்கோட்டை அருகேபள்ளியை தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் தர்ணா
Posted December 16, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டைபட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றியம் கருப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை
வைத்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை தரம் உயர்த்தவில்லை. இதனால் இப்பள்ளியில் படிக்கும் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) வளர்மதி, மதுக்கூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதுகுறித்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கூறுகையில், இந்த பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகள் இல்லாததால் 7 கிலோ மீட்டர் கடந்து சென்று படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். இந்த பள்ளியை தரம் உயர்த்தினால் 4 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர் என்றனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகேபள்ளியை தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் தர்ணா”