டெல்டாவில் மீண்டும் மழை விவசாயிகள் கவலை?

Posted November 03, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை, நவ. 3:வங்க
கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் திருவாரூர், நாகை மாவட்டங்களில் 1.15 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருந்தது. மழை விட்டு 2, 3 நாட்களாகியும் தண்ணீர் வடியாததால், பயிர்கள் அழுகும் அபாயம் இருந்தது. விவசாயிகள் கவலை அடைந்தனர். தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்த நிலையில், பயிர்களுக்கு மேலுரம் இடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், அதிராம்பட்டினம்,
திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திருச்சியில் நேற்று சாரல் போல் மழை பொழிவு இருந்தது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை துவங்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூருக்கு நீர்வரத்து சரிவு:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், பாலாறு வனப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 11,377 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 9630 கனஅடியாக குறைந்தது.

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதால் அணையின் நீர்மட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 101.19 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 101.81 அடியாக அதிகரித்தது.நன்றி தினகரன் 


0 comment(s) to... “டெல்டாவில் மீண்டும் மழை விவசாயிகள் கவலை?”