பொம்மையில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை விழுங்கிய சிறுவன்
Posted February 19, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
பேட்டரியை விழுங்கிய சிறுவன்
குழந்தைகள், சிறுவர்களுக்கு பொம்மை என்றால் அலாதி பிரியம். இந்த பொம்மைகளை வைத்து சிறுவர்கள் விளையாடும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைவதுடன், வீட்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல் இருப்பார்கள். இதனால் பெரும்பாலான வீடுகளில் விதவிதமான பொம்மைகள் இருப்பதை காணலாம். ஆனால் இந்த பொம்மைகள் மூலம் சிறுவர்கள் விளையாடும்போது அந்த விளையாட்டு சிலநேரங்களில் வினையாக மாறுவதும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் நடந்துள்ளது. அதன்விவரம் வருமாறு:-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா மகாதேவபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவருடைய மகன் சிவராஜ்(வயது6). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று சிவராஜ் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தான். பின்னர் அவன், வீட்டில் இருந்த ஒரு பொம்மையை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்தான். அந்த பொம்மையின் பின்புறம் சிறியஅளவில் பொத்தான் பேட்டரி(அதாவது 50 காசு நாணயம்போன்று இருக்கும்) பொருத்தப்பட்டு இருந்தது. அந்த பேட்டரியை கழற்றிய சிவராஜ் தனது வாய்க்குள் போட்டு விளையாடி கொண்டிருந்தான். திடீரென அந்த பேட்டரியை சிவராஜ் விழுங்கிவிட்டான். உடனே வீட்டில் இருந்த தனது பெற்றோரிடம், பேட்டரியை விழுங்கிவிட்டதாக கூறினான்.
வெளியே எடுக்கப்பட்டது
இதை கேட்டு பதறிய பெற்றோர், அவனை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிவராஜ் கொண்டு செல்லப்பட்டான். அப்போது அங்கு பணியில் இருந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை டாக்டர் பிரின்ஸ், உடனே சிவராஜை பரிசோதனை செய்தார். பின்னர் சிவராஜுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது அவன் விழுங்கிய பேட்டரியானது உணவு குழாயில் நெஞ்சுப்பகுதியில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
உடனே இந்த விஷயம் தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் சங்கரநாராயணன், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை பிரிவுதுறை தலைவர் ராமநாதன், பேராசிரியர் ரவீந்திரன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களது ஆலோசனையின்பேரில் டாக்டர் பிரின்ஸ் மற்றும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைபிரிவு குழுவினர் சிவராஜ் விழுங்கிய பேட்டரியை வெளியே எடுக்க முடிவு செய்தனர். அதன்படி அகநோக்கி கருவி மூலம் உணவு குழாயில் இருந்த பேட்டரி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிவராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நல்ல நிலையில் சிவராஜ் உள்ளான். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சிவராஜை தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் நேற்று நேரில் அழைத்து, அவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
விழிப்புணர்வு
பின்னர் தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் சங்கரநாராயணன், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை பிரிவுதுறை தலைவர் ராமநாதன் ஆகியோர் கூறும்போது, உணவு குழாயில் பேட்டரி இருந்ததால் அவனை காப்பாற்ற முடிந்தது. கொஞ்சம் தாமதம் செய்து இருந்தால், உணவு குழாய் கிழிந்து ரத்தகுழாய்க்கு பேட்டரி வந்து இருக்கும். அப்படி வந்து இருந்தால் ரத்தகுழாய் வெடித்து, அசம்பாவித சம்பவம் நடைபெற்று இருக்கும். ஆனால் உரிய நேரத்தில் அவன் கொண்டு வரப்பட்டதால், உணவு குழாயில் இருந்த பேட்டரி அகநோக்கி மூலம் அகற்றப்பட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளான். பொம்மையில் பயன்படுத்தப்படும் பேட்டரியை நாம் கையில் சிறிது நேரம் வைத்திருந்தால் கூட அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும். எனவே மிகவும் ஆபத்தான இந்த பேட்டரியை எளிதாக குழந்தைகள் கழற்றும் வகையில் பொம்மையில் பொருத்தியுள்ளனர். விளையாட்டு பொருட்களில் இத்தகைய பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். news py dailythanthi
0 comment(s) to... “பொம்மையில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியை விழுங்கிய சிறுவன்”