நெருங்கும் கோடை விடுமுறை: டிரைவர் பற்றாக்குறையால் பரிதவிக்கும் அரசு போக்குவரத்து கழகம்

Posted March 25, 2015 by Adiraivanavil in Labels:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள் பற்றாக்குறையால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கோடை விடுமுறையை எப்படி சமாளிப்பது என திகைத்து போய் உள்ளனர். தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் 19 கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சுமார் 1,500 பேருந்துகள் நெடுந்தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் டிரைவர்களாக சுமார் 800 பேர் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பணிமனைகளிலும் டிரைவர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதன் காரணமாக பல பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு முழுவதும் பணி முடிந்து காலை வீடு திரும்பும் டிரைவர்கள் கூடுதல் பணி செய்ய நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. ஓய்வின்றி பேருந்துகளை இயக்குவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. இது முடிந்ததும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும். குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வண்ணம் விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டிரைவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையால் தினமும் 3 பேருந்துகள் வீதம் இயக்கப்படாமல் ஓரங்கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு போதிய அளவு பேருந்துகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இந்த காரணத்தால் பயணிகள் தனியார் பேருந்துகளை நாடி செல்கின்றனர். இது குறித்து டிரைவர்கள் சிலர் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகத்தில் இருக்கும் பேருந்துகளுக்கு ஏற்ப டிரைவர்கள் இல்லை. இதனால் ஒருவரே டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியை செய்து வருகின்றனர். இந்த காரணத்தால் பணி தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.

news by.oneindia


0 comment(s) to... “நெருங்கும் கோடை விடுமுறை: டிரைவர் பற்றாக்குறையால் பரிதவிக்கும் அரசு போக்குவரத்து கழகம் ”