காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை காதல்ஜோடிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை

Posted February 14, 2016 by Adiraivanavil in Labels:
சென்னை, 

சென்னையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதிக்கவில்லை. காதல்ஜோடிகளை அச்சுறுத்துபவர்கள் மீதும், எல்லை மீறும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக காதலர் தினம்

உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘காதலர் தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தினத்தை ஆண்டுதோறும் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி, இன்று காதலர் தினத்தை கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காதலர்கள் கொண்டாட உள்ளனர்.

தங்கள் மனம் கவர்ந்த நாயகிக்கு காதலனும், நாயகனுக்கு காதலியும் ரோஜா பூ, பூங்கொத்து, சாக்லெட், ஆடைகள் போன்ற பரிசுப்பொருட் களை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

சென்னையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதிக்கவில்லை. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் காதலர் தினத்தை கொண்டாட காதலர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளனர். 

ஆனால் ஆபாசத்தை அனுமதிக்க முடியாது என்றும், பொது இடங்களில் எல்லை மீறும் காதல்ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

கள்ளக்காதலர்களுக்கு எச்சரிக்கை

காதலர்கள் என்ற போர்வையில் பொதுஇடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் கள்ளக்காதல் ஜோடிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

‘காதலர் தினம்’ தமிழ்நாட்டின் கலாசாரத்துக்கு எதிரானது என்று சிலர் போர்கொடி தூக்கி வருகின்றனர். அதுபோன்ற நபர்களால் தாங்கள் துன்புறுத்தலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறோம் என்று காதல்ஜோடிகள் குமுறுகின்றனர்.

எனவே காதல்ஜோடிகளை யாரெனும் அச்சுறுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் காதலர் தின கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காதலர்கள் அதிகம் கூடும் இடங்களில் மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


0 comment(s) to... “காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை காதல்ஜோடிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை”