கடைவீதியில் தீவிபத்து. மோட்டார் சைக்கிள் உட்பட ரூபாய் 3 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
Posted February 16, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் பட்டறை ( டூ வீலர் ஒர்க்ஷாப்), தேநீர்க்கடை, பெட்டிக்கடை, காய்கறிக்கடை, நகைப்பட்டறை உள்ளிட்ட நான்கு கடைகள்
தீயில் எரிந்து சாம்பலாகியது.
இதில் சுமார் ரூபாய் 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமடைந்தன.
பேராவூரணி கடைவீதியில் குடியிருந்து வருபவர் பிச்சையம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டின் முன்பாக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இவரது கட்டிடத்தில் ராஜ்குமார்( வயது 40) டூ வீலர் ஒர்க்ஷாப்பும், ராஜேந்திரன் ( வயது 47) தேநீர் கடை மற்றும் பெட்டிக்கடையும், மாலா ( வயது 36) காய்கறிக்கடையும், குமார் என்பவர் நகை பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை
சுமார் 2 மணியளவில் திடீரென கடைகள் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் நான்கு கடைகளும் முற்றிலுமாக தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதியிலும் தீப்பற்றியது. உறங்கிக் கொண்டிருந்த கடை உரிமையாளர் பிச்சையம்மாளின் மகன் உலகநாதன் ( வயது 47) எழுந்து தீயை அணைக்க முயற்சிக்கையில் தீக்கங்குகள் அவரது இரு கையிலும் பட்டு காயமடைந்தார்.
தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் மணிவாசகம் மற்றும் அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் மின் இணைப்பை துண்டித்து மேலும் தீ பரவாதவாறு போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகில் உள்ள பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் கடை தீ பரவாதவாறு காப்பாற்றப்பட்டது.
இவ்விபத்தில் மூன்று மோட்டார் பைக்குகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் முற்றிலுமாக தீக்கிரையானது.
தகவல் அறிந்து பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினவேல், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை அலவலர்கள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவம் பற்றி அறிந்த வர்த்தக சங்கத்தலைவர் பி.எஸ்.அப்துல்லா, செயலாளர் ஆர்.வெங்கடேசன், வர்த்தக சங்க முன்னாள் தலைவர் மா.கோவிந்தராஜன், கவுன்சிலர்கள் டாக்டர் மு.சீனிவாசன், வி.கார்த்திகேயன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “கடைவீதியில் தீவிபத்து. மோட்டார் சைக்கிள் உட்பட ரூபாய் 3 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ”