முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக் கோரிஜமாத் பிரமுகர்கள் ஓட்டலுக்குள் உள்ளிருப்பு போராட்டம். பதற்றம், பரபரப்பு.
Posted February 02, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே புதுப்பள்ளி வாசல் ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 27 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த திரியெம் அஜீஸ் என்பவர் திரியெம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 15 வருடங்களுக்கு முன்பு தனது ஓட்டலை திரியெம் அஜீஸ் அவரின் உறவினரான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜா மைதீன் நடத்தி வந்தார். இந்த நிலையில் புதுப்பள்ளி வாசல் நிர்வாகம் ஓட்டல் இருக்கும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலி இடத்தில் பெண்கள் மதரசா கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீனிடம் தனது ஓட்டலை காலி செய்யும் படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஓட்டல் உரிமையாளர் 3 மாதம் கால அவகாசம் கேட்டதால் கொடுக்கப்பட்டது. அதனால் சென்ற 31-ம் தேதி ஓட்டலை காலி செய்து கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் ஹாஜா மைதீன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டலை காலி செய்ய மறுத்து வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளார். இதனால் பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 31-ம் தேதி ஓட்டலை காலி செய்யாமல் நேற்றும் ஹாஜா மைதீன் வழக்கம் போல் வியாபாரத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் அவர்களுக்கு ஆதரவாக த.மு.மு.க நகரத் தலைவர் சம்சுதீன், மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், தி.மு.க மாவட்ட பிரதிநிதி இபுராஹிம், வார்டு செயலாளர் பியூட்டி நவாஸ்கான், அ.தி.மு.க நிர்வாகி சுல்தான் இபுராஹிம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சர்ச்சைக்குரிய அந்த ஓட்டலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் உடனடியாக ஓட்டலை காலி செய்யவிட்டால் நாங்களே பிரித்து அகற்றுவோம் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடமும் ஓட்டல் உரிமையாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஓட்டல் உரிமையாளர் ஹாஜா மைதீன் ஓட்டலை உடனடியாக காலி செய்வதாக உறுதி அளித்தார். அதன் பிறகே போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஓட்டலிலிருந்து வெளியேறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை0 comment(s) to... “முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஓட்டலை காலி செய்யக் கோரிஜமாத் பிரமுகர்கள் ஓட்டலுக்குள் உள்ளிருப்பு போராட்டம். பதற்றம், பரபரப்பு.”