பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியை (தலைமை செயலகத்தில் இருந்து) முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Posted February 16, 2016 by Adiraivanavil in Labels:
 பேராவூரணி பிப்ரவரி-16;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காடு ஊராட்சியில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 7 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட அரசு கலைஅறிவியல் கல்லூரி கட்டிடத்தினை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தவாறே ஞாயிறு அன்று காலை 11.55 க்கு திறந்து வைத்தார்.
     இதையொட்டி கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ஆர்.வீரகபிலன், அதிமுக தொகுதிச்செயலாளர் மா.கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் குழ.சுந்தர்ராஜன், மாநில கயறு வாரியத்தலைவர் 
நீலகண்டன், நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, பெருமகளூர் பேரூராட்சி தலைவர் பி.ராமமூர்த்தி, ஊராட்சி தலைவர் மீனாட்சி ரெங்கராஜன், ஊராட்சி துணைத்தலைவர் மதினா முகமது மைதீன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் குழ.செ.அருள்நம்பி, பழனியம்மாள் சாமியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகாமி அருணாசலம், கே.பாலு
உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
      கல்லூரி முதல்வர் நிர்மலா, முன்னாள் முதல்வர் லெட்சுமி, முனைவர் பழனிவேல் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவியரும் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் புறக்கணிப்பு 
முக்கியமான இவ்விழாவில் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் செ.அருண்பாண்டியன் (அதிமுக ஆதரவு எம்எல்ஏ) வழக்கம் போல கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலவில் அருண்பாண்டியன் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதிமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு இனிப்புகள் வழங்கினர். கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

திறந்த நேரம் தெரியாமல் குழப்பம் 
கல்லூரி காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்படும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையே அதிமுகவினரும் போன் செய்து நிருபர்களுக்கு தகவல் தெரிவித்தனர். காலை எட்டு மணிமுதலே அதிமுகவினர், பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லூரியில் வந்து காத்துக் கிடந்தனர். நேரம் செல்லச்செல்ல கல்லூரியை முதல்வர் எப்பொழுது திறப்பார் என அதிமுகவினர் நிருபர்களிடம் கேட்கத் தொடங்கினர். பின்னர் ஒரு வழியாக 11.55 க்கு முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து  திறந்து வைத்தார் என அறிவிக்கப்பட்டது. கல்லூரியில் காணொலி காட்சி ஏற்பாடுகள் செய்யபடாததால் முதலமைச்சர் எப்பொழுது திறந்து வைத்தார் என தெரியாமல் அனைவரும் குழப்பமடைந்தனர். கல்வித்துறை அலுவலர்களிடம் இருந்து தகவல் வந்த பின்னர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் அதிமுகவினர் குத்து விளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.
கல்லூரி அமைவிட பெயர் பிரச்சினை 
கல்லூரி திறப்பதற்கு முன்னதாக காலை கல்லூரி அருகே கூடிய முடச்சிக்காடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கல்லூரி அமைந்துள்ள இடம் முடச்சிக்காடு ஊராட்சி எல்லையில் அமைந்துள்ளதால் பேராவூரணி அரசு கலைஅறிவியல் கல்லூரி என்பதனை, பேராவூரணி அரசு கலைக்கல்லூரி 
இருப்பு முடச்சிக்காடு என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தகவல் வந்தது. முடச்சிக்காடு ஊராட்சி தலைவர் மற்றும் அதிமுகவினர் கிராமத்தினரை சமாதானப்படுத்தினர். விழா நடந்து கொண்டிருந்த போதே ஏற்கனவே பேராவூரணி என எழுதப்பட்டிருந்த கல்லூரி பெயர்ப்பலகை இருப்பு முடச்சிக்காடு என பெயர் மாற்றி எழுதப்பட்டது.
      கல்லூரி அதிகாரப்பூர்வமாக வரும் (ஏப்ரல்-மே மாதத்தில்) கல்வியாண்டில் புதிய கட்டிடத்தில் இயங்கும் என தெரிகிறது. அதுவரை தற்போது பட்டுக்கோட்டை சாலை ஆண்டவன்கோவில் என்ற இடத்தில் பழைய இடத்திலேயே கல்லூரி இயங்கும் எனத் தெரிகிறது.

மாணவிகள் அவதி
புதிய கல்லூரி கட்டிடம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவிகள் வெயிலில் நடந்து சென்றது பரிதாபமாக இருந்தது. கல்லூரி வழியாக செல்லும் தனியார் மினி பேருந்தும் வழக்கமாக செல்லும் பயணிகளுடன், மாணவிகளையும் ஏற்றி சரக்கு மூட்டை போல் அடைத்து சென்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை 
வரும் கல்வி ஆண்டு கல்லூரி திறக்கும் போது காலை, மாலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவியர் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




0 comment(s) to... “பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியை (தலைமை செயலகத்தில் இருந்து) முதலமைச்சர் திறந்து வைத்தார்.”