முத்துப்பேட்டையில் உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வணிகர்கள் களம் இறங்கும் நேரம் தயாராகி விட்டது: வெள்ளையன் பேட்டி

Posted February 01, 2016 by Adiraivanavil in Labels:
உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வணிகர்கள் களம் இறங்கும் நேரம் தயாராகி விட்டது: வெள்ளையன் பேட்டி, முத்துப்பேட்டையில் வர்த்தகக்கழக ஆண்டுவிழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இன்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புகளாக இருப்பது விலைவாசி உயர்வு, இறக்குமதியையே நாம் நம்பி இருப்பது, தரமற்ற அந்நிய தயாரிப்புகளை நாம் சந்தைப்படுத்தப்படுவது ஆகும். எல்லா தொழில்களிலும் அந்நிய ஆதிக்கம் ஏற்படுவது என்று தொடங்கி இப்போது வணிகத்தையும் அழித்து விட ஆன்லைன் வர்த்தகம் அதாவது இணையத்தளம் மூலம் செய்யும் வர்த்தகத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம்தான். இதனை நடைமுறைப்படுத்தினால் விவசாயத்தை இழப்பார்கள். வருமானத்தை இழப்பார்கள். இதன் மூலம் விலைவாசி உயரும், நாட்டில் சுதந்திரம் பறிபோகும் என்பதையெல்லாம் தெரிந்திருந்தும் கூட தலைவர்கள் உலக வர்த்தக ஒப்பந்தம் இதனை கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள்.
இந்த உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வணிகர் களம் இறங்க வேண்டிய நேரம் தயாராகிவிட்டது. இதனை விரைவில் அறிவிப்போம். அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் வணிக சங்க மாநாட்டில் வியாபாரிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக் கொள்ள வேண்டும். முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக 24 மணி நேரம் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். முத்துப்பேட்டை வழியாக செல்லும் காரைக்குடி முதல் திருவாரூர் வரை உள்ள அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
முத்துப்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் குறைக்க நினைக்கும் செயலை நிர்வாகம் கைவிட வேண்டும். சென்ற ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை தனி தாலுக்கா அறிவிப்பை அ.தி.மு.க அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதற்காக இப்பகுதி மக்கள் போராட தயாராக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்குபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் முருகையன், அல்மஹா ஹைதர்அலி, முத்துப்பேட்டை தலைவர் ராஜாராம், கவுரவ தலைவர் திருஞானம், பொதுச்செயலாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் மெட்ரோ மாலிக், நெய்னா முகம்மது, பழனித்துரை, மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆண்டு விழாவில் ஆதரவற்ற சிறுவன் பல வேலைகளை செய்து கொண்டிருந்தான். பின்னர் மதிய உணவு நேரத்தில் தானே உணவை எடுத்து வைத்து சாப்பிட்டான். இதனை நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரை கவனித்துக் கொண்டிருந்த வெள்ளையன் அந்த சிறுவனிடம் சென்று நலம் விசாரித்தும் குடும்பத்தைப் பற்றி அறிந்து பாசத்தை பரிமாற்றிக் கொண்டார். பின்னர் விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட சால்வை உட்பட அனைத்து பொருட்களையும் அந்த சிறுவனிடம் வழங்கினார். 


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வணிகர்கள் களம் இறங்கும் நேரம் தயாராகி விட்டது: வெள்ளையன் பேட்டி”