எங்கள் வீட்டை அகற்றினால் பேரூராட்சியில் குடியேறுவோம்.' அ.தி.மு.க பேரூராட்சி தலைவருக்கு எதிராக துப்புரவு பணியாளர்கள்; மக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசூரம். முத்துப்பேட்டையில் பரபரப்பு.

Posted April 09, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய பரபரப்பளவில் உள்ள
பட்டரைக்குளம் தற்பொழுது சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்பால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குளத்தின் கரையோரம் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர் சுமார் 25 குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். இங்கே இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உட்பட அனைத்தும் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பட்டரை குளத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக குளத்தை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 27 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தடுப்பு சுவர் கட்ட பணியை துவங்கியது. இதனை பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் பணியை நிறுத்தாமல் கட்டி முடித்தது. இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு உயர் நீதி மன்றம் முறைக்கேடாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவரையும், சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பல மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பலமுறை கால அவகாசம் பெறப்பட்டது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு முழுவதையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்படும் துப்புரவு பணியாளர்களின் 25 குடும்பங்களுக்கு அ.தி.மு.க பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் மாற்று இடம் தருவதாக உறுதி அளித்த அவர் தற்பொழுது மாற்று இடம் தருவதில் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் அதிர்ப்தி அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று 7-ம் தேதி முதல் பணிக்கு விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு பணிக்கு வராமல் 'துப்புரவு பணியாளர்களான எங்களின் 25 குடும்பங்களுக்கு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் வேண்டும்' என்ற தலைப்பில் அ.தி.மு.க பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி ஆகியோருக்கு எதிராக ஆயிரக்கணக்கான துண்டு பிரசூரம் அடித்து நேற்று காலை முதல் வீதி வீதியாக மக்களிடம் வழங்கி ஆதரவு கேட்டு செல்கின்றனர். இதில் எந்த சூழலிலும் வீடுகளை இழக்கமாட்டோம். அப்படி இழந்தால் பேரூராட்சியில் குடியேருவோம் போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். இதனால் முத்துப்பேட்டை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “எங்கள் வீட்டை அகற்றினால் பேரூராட்சியில் குடியேறுவோம்.' அ.தி.மு.க பேரூராட்சி தலைவருக்கு எதிராக துப்புரவு பணியாளர்கள்; மக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசூரம். முத்துப்பேட்டையில் பரபரப்பு.”