திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு
Posted April 15, 2015 by Adiraivanavil in
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவருக்கும், அரியானாவின் படேஹாபாத் மாவட்டத்திலுள்ள ராட்டியா டவுன்ஷிப்பில் வசிக்கும் மான்சிக்கும் கடந்த ஜனவரி 11-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 22-ந்தேதி திருமண விழா நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்ததுடன், திருமண அழைப்பிதழையும் வழங்கி வந்தனர். இந்நிலையில் மணமகன் சஞ்சீவ் வரதட்சணையான காரும், இதர பல வசதிகளையும் செய்து தருமாறு நிபந்தனை விதித்தார்.
இதை ஏற்க மணமகள் மான்சியின் வீட்டார் மறுக்கவே, திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக மான்சியின் தாய்மாமா நரேஷ் சர்மா கூறினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மணமகன் வீட்டார் மறுத்தனர். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இணைந்தே திருமணத்தை ரத்து செய்வது குறித்த முடிவை எடுத்ததாக மணமகன் வீட்டார் கூறினர்.
இதையடுத்து காவல்துறையில் மணமகள் மான்சி புகார் அளித்தார். அப்போது பஞ்சாயத்தார் உதவியுடன் இப்புகாரை தீர்த்துக்கொள்வதாக போலீசாரிடம் கூறிய மணமகன் தரப்பினர், அதற்கு சிறிது காலம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து காவல்நிலையத்திலேயே உள்ளூர் பஞ்சாயத்து கூடியது. அப்போது இருதரப்புக்கிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் திருமணத்தை நிறுத்திய மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. இந்த அபராதத்தை அங்குள்ள கோசாலைக்கு மணமகன் நேரில் சென்று செலுத்தவேண்டும் என்றும் பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதை மணமகளும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது போலீசாரிடம் கேட்டபோது, பஞ்சாயத்தாரின் தீர்ப்பில் தாங்கள் தலையிடுவதில்லை என்று கூறிய அவர்கள், எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இத்தீர்ப்பில் சம்மதமா என்று கேட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
0 comment(s) to... “திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு”