தியாக திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

Posted September 27, 2014 by Adiraivanavil in Labels:




மக்காஹ் நூறு ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்லாமிய வருடத்தின் கடைசி மாதம் துல்ஹஜ் 10 - ம் நாள் கொண்டாடபடுவதே இந்த "தியாக திருநாள்".


நம் நாட்டில் பெரும்பாலும் இந்த பெருநாளை "பக்ரித்" என்றே அழைப்பார்கள். இப்பெருநாளின் நோக்கம் என்ன என்று அறிந்தால்?
தான் தெரியும். எதற்காக இதை கொண்டாடுகின்றோம் என்று தெரிந்தால்? தான் தெரியும். எதை நினைவுகூற இதை கொண்டாடுகின்றோம்? என்று தெரிந்தால்? தான் தெரியும்.


நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடபடுவதே இந்த "தியாக திருநாள்". நபி இப்ராஹீம் (அலை) அப்படி என்ன தியாகம்? செய்தார்கள். பொறுமையாக படியுங்கள் உங்கள் நேரத்தை கொஞ்சம் தியாகம் செய்து!!!

நபி இப்ராஹீம் (அலை) வரலாறு

இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4. 

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் தூதுவராக அனுப்பபட்டவர். கிறிஸ்துவர்களால் "ஆப்ரஹாம்" என்று அழைக்கபடுபவர்.  அல்லாஹ்வின் இல்லம், இஸ்லாமியர்களின் புனித இடமான "காஃபா" வை  கட்டியவர்கள். எந்தவித மாறுதலுமின்றி அப்படியே பின்பற்ற வேண்டிய தலைவர்களை உஸ்வா என்று அழைப்பார்கள். முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய உஸ்வாக்கள் என இறைமறை இருவரை குறிப்பிடுகிறது. அழகிய முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்களையும், இப்ராஹீம் (அலை) அவர்களையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிலைகளை அதிகமாக வணங்க கூடியவர்கள் இருந்தார்கள். இஸ்லாத்தை அவர்களிடம் அழகிய முறையில் ஆழமாக எத்தி வைத்தார்கள். தன்னுடைய தந்தையே சிலையை வணங்க கூடியவராக தான் இருந்தார். தன்னுடைய தந்தைக்கும் அழைப்புப்பணி செய்தார்கள். தம் சார்ந்த மக்களிடமும் அழைப்புப்பணி செய்தார்கள். சிந்திக்க வைத்தார்கள்.

அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்).26:72,73.

தன்னுடைய தந்தையின் எதிர்ப்பு, அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு, ஊர் மக்களின் எதிர்ப்பு என பல எதிர்ப்புகளுக்கும் இடையில் இஸ்லாத்தின்பால் மக்களை அழைத்தார்கள். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து அணைத்து துன்பங்களையும் சகித்து கொண்டு, இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

மக்காஹ் நூறு ஆண்டுகளுக்கு முன்பு


திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு ஒரு அழகான ஆண் குழந்தை  (நபி இஸ்மாயில் (அலை)) பிறந்தது. ஊரின் எதிர்ப்பினால் மனைவி குழந்தையோடு பாலைவனத்தில் ஹிஜ்ரத் (பயணம்) செய்தார்கள். அந்த நேரத்தில் தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான், மனைவியையும் கை குழந்தையையும் பாலைவனத்தில் விட்டுவிட சொல்லி. எந்தவித யோசனயுமின்றி கட்டளையை நிறைவேற்றினார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மனைவி ஹாஜரா அவர்கள் கேட்டார்கள்,

’’இப்ராஹீமே,இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்....

’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’.... என்று ஹாஜரா கூறினார்கள். 

ஸஃபா, மர்வா மலை (தொங்கு தோட்டம் ஓடுதல்) 

கை குழந்தையோடு ஹாஜரா அவர்கள் பாலைவனத்தில் தன்னந்தனியாக வீடின்றி, உணவின்றி, தண்ணீரின்றி, தன் கணவர் எப்பொழுது திரும்பி வருவார் என்று கூட தெரியாமல் அல்லாஹ்விற்காக கஷ்டத்தை அனுபவித்தார்கள்.



பிள்ளையின் தண்ணீர் தாகத்திற்க்காக பாலைவனத்தில் ஸஃபா, மர்வா என மலைகளுக்கு இடையே அங்கும் இங்குமாக ஓடினார்கள். பாலைவனத்தில் ஏது தண்ணீர். அந்த பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசு தான் ஜம்ஜம் நீருற்று. உம்ரா, ஹஜ்ஜிற்கு செல்லும் அனைவர்களும் ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையே ஓடும் தொங்கு தோட்டத்தின் நோக்கம் இந்த தியாக பெண்மணியை நினைவு கூற தான். 

குர்பானியின் (பலியிடுதல்) நோக்கம்

பல வருடங்கள் கழித்து நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பி வந்தார்கள். தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் தானாக உழைக்க கூடிய வயதை அடைந்தார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் தம் மகனை பலியிட கட்டளையிட்டான்.  பல வருடம் குழந்தை இல்லாது வயது கடந்து பெற்ற தன் பிள்ளை நபி இஸ்மாயில்(அலை) அவர்கள் மீது மிகுந்த பாசம் உடையவர்களாக இருந்தார்கள். 

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய கனவில் அல்லாஹ் கட்டளையிட்ட விஷயத்தை தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களிடம் சொன்னார்கள்.  சற்றும் தயக்கமின்றி நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடியே செய்யுங்கள் என்று கூறினார்கள். 

“என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”37:102.


இறைவனின் கட்டளையை நிறைவேற்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தயாரானார்கள். அந்த நேரத்தில் சைத்தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சைத்தானிர்க்கு கட்டுப்படாமல் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார்கள். 

வானவரின் தூதர் ஜிப்ரையில் (அலை) அவர்களை அனுப்பி தன் மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். தன்னுடைய மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான். இதன் காரணமாகவே "குர்பானி" கொடுக்கபடுகின்றது. 

அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் ப­லியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூ­ வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய ப­ப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூ­ வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.அல்குர்ஆன் (37 : 100)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறவே "குர்பானி"கொடுக்கபடுகின்றது. அதாவது அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம் என்பதே இதன் பொருள்.



மாடை அறுத்து கொண்டாடுவது அல்ல இந்த பக்ரித் பெருநாள். தியாகத்தை நினைவு கூற கொண்டாடுவதே இந்த தியாக திருநாள். 


அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)


இதன் பொருளை உணர்ந்து அனைவரும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து இப்பெருநாளுக்கு உரிய சிறப்பை செய்து கொண்டாடுவோம். 

குர்பானி கொடுக்கும் முறை

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். 



குர்பானி கொடுப்பது வலியுறுத்தி சொல்லப்பட்ட சுன்னத்தாகும். குர்பானிக்கு அனுமதிக்கப்பட்ட பிரானியையே அறுக்க வேண்டும். ஹராமான பிராணி அறுக்க கூடாது.

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

”நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ர­) நூற்கள் : முஸ்­ம் (3655), நஸயீ (4285)

ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.

குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள்

  • குர்பானி கொடுக்கப்படும் பிராணி ஹலாலானதாக கட்டாயம் இருக்க வேண்டும்.
  • செம்மறி ஆடாக இருப்பின் ஆறு மாதம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
  • சாதாரண ஆடிற்கு ஒரு வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
  • மாட்டிற்கு இரண்டு வருடம் ஆகியிருக்க வேண்டும்.
  • ஒட்டகத்திற்கு ஐந்து வருடம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

குர்பானிக்கு ஆடு கொடுத்தால் ஒரு பங்காக (ஒருவர்) மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மாடு அல்லது ஒட்டகத்தை ஏழு பங்காக பிரித்து கொடுக்கலாம். அதாவது கூட்டு குர்பானி. 

ஒவ்வொரு பங்கும் மூன்றாக பிரிக்கப்படவேண்டும். 

மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கும் பயன்படுத்திகொள்ளவேண்டும். 

குறிப்பு : 

யாரும் "பக்ரித்" என்று அழைக்காதீர்கள். 

காரணம் "பக்ரித் - பகரா + ஈத்" என்றால் மாட்டுபெருநாள் என்று பொருள். (அரபியில் பகரா - மாடு, ஈத் - பெருநாள்). இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது போல அழைப்பது நம்முடைய நாட்டில் வழக்கமாக ஆகிவிட்டது. இது ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாம். காரணம் முஸ்லிம்களின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், உண்மையான காரணத்தை மறக்கடிக்கவும் செய்து இருக்கலாம்.

காரணம் மாடை அறுக்க எதிர்ப்பவர்கள் இது போல பெயரிட்டு, இந்த பெருநாளே மாடை அறுப்பதற்கு தான் என்று பேச வைத்துவிட்டார்கள். இந்த பெருநாளே மாடை அறுக்க தான் என்றும், இதை தடை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றார்கள்.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)

நாமும் இந்த சூழ்ச்சியில் வீழ்ந்து விட வேண்டாம்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடபடுவதே"தியாக திருநாள் " "عيد الآضحى".

(عيد -  பெருநாள்)  (தியாகம் - الآضحى).


0 comment(s) to... “தியாக திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?”