பேராவூரணி அருகே நகையை திருப்பி கேட்ட பெண் தீ வைத்து எரிப்பு
Posted September 20, 2014 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மனைவி சீதாலட்சுமி (வயது40). இவர்களது மகன் கமலஹாசன்(18). கஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் கமலஹாசன் கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சீதாலட்சுமியின்
சகோதரர்களான ரமேஷ், நீலகண்டன் ஆகியோர் வெளிநாட்டுக்கு செல்ல சீதாலட்சுமி தனது 4½ பவுன் நகையை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் வெளிநாடு சென்று வந்த பின் சீதாலட்சுமியின் சகோதரர்கள் நகையை மீண்டும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த சீதாலட்சுமி தனது சகோதரர்கள் மனைவியான சுசிலா, காந்திமதி, மற்றும் தனது தாயார் சிவபாக்கியம் ஆகியோரிடம் சென்று இதுபற்றி கேட்டார். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுசிலா, காந்திமதி, சீதாலட்சுமியின் தாய் சிவபாக்கியம் ஆகியோர் சேர்ந்து, சீதாலட்சுமி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகி மயங்கி விழுந்த சீதாலட்சுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சேது பாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் சீதாலட்சுமியின் தாய் சிவபாக்கியம், சுசிலா, காந்திமதி ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “பேராவூரணி அருகே நகையை திருப்பி கேட்ட பெண் தீ வைத்து எரிப்பு”