அதிரை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Posted September 13, 2016 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தஞ்சை கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி  தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ராவுத்தான்வயல் ஊராட்சி மன்ற தலைவர் தஸ்தகிர், மரக்காவலசை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கூட்டமைப்பினர், விவசாயிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–


தமிழக அரசு சிறு,குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கான பட்டியலை அந்தந்த வங்கியில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் சேதுபாவாசத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் வைக்கப்படவில்லை. இது குறித்து வலியுறுத்திய பின்னர் பட்டியல் வைக்கப்பட்டது. அதனை பார்த்த போது முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது.

ரூ.60 லட்சம் மோசடி 


இதில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி பற்றிய விவரப்பட்டியலில் இதுவரை 56 பேருக்கு போலியாக கடன்கள் வழங்கப்பட்டது தெரிய வந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் யார் என்றும், நகை யாருடையது என்றும் அடையாளம் காட்டப்படவில்லை. இதுவரை சுமார் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது ரூ.1 கோடியை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் டிராக்டர் கடன் இந்த வங்கியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆனால் 2 பேருக்கு டிராக்டர் கடன் வழங்கியதாகவும், அது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கி தானிய கிடங்கில் நெல் மூட்டைகள் வைத்துள்ள விவசாயிகள் கடன்பெறவில்லை. ஆனால் அவர்கள் கடன் பெற்றதாக கூறி அதுவும் தள்ளுபடி செய்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தவறு செய்துள்ள அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மீது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

அப்போது கூட்டமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராமநாதன், கூட்டமைப்பை சேர்ந்த லிங்கநாதன், முருகேசன், மாணிக்கம், சரபோஜி, இக்பால் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி தினத்தந்தி




0 comment(s) to... “அதிரை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் ”