ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை
Posted June 17, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
வாகன விபத்து இழப்பீட்டு தொகை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் முதல் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக ஜூன் 18-ம் தேதிக்குள் அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அரசு விளம்பரம் செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகனங்களை பிடித்து, அவ்வாகனங்களின் உரிமச்சான்றிதழ், மற்றும் வாகன உரிமையாளர்களின் ஓட்டுனர் உரிமத்தை முடக்கி வைக்கலாம். புதிய ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை அந்நபர்கள் காட்டிய பின்னர் அவற்றை விடுவிக்கலாம் எனவும் போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1-7-2015 முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டம்-1988, பிரிவு 206ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றைக் காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “ ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை”