அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்துப்பாதிப்பு

Posted November 26, 2016 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம்,நவ.26
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள கனராவங்கியில் முறையாக பணம் வழங்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரைச் சாலையை ஒட்டி கனராவங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது.

இந்த வங்கி பல வருடங்களாக அதிராம்பட்டினத்தில் இயங்கி வருவதால் அதிகப்படியான பணப்பரிமாற்றம் நடைபெற்றுவருகிறது.இதனால் எந்த  நேரத்திலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.இந்நிலையில் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவித்ததோடு குறிப்பிட்ட தொகையே  பணம் எடுக்கமுடியும் என்ற அரசின் உத்தரவின்படி அனைத்து வங்கியிலும் குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்பட்டுவந்தது

.இந்நிலையில்  கடந்த ஒருவார காலமாக இந்த வங்கியில் அரசு அறிவித்த குறிப்பிட்ட  தொகை பணம் எடுக்கச் சென்றாலும் பணம் இருப்பில் இல்லை எனக்கூறி  வங்கி ஊழயர்கள் திருப்பி அனுப்பிவிடுவதாகவும் ஏடிஎம் பல நாட்களாக பூட்டிக்கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல பேங்குக்குச் சென்ற வாடிக்கையாளர்களை வங்கி ஊழியர்கள் திருப்பி அனுப்பியதோடு பணம் இருப்பில் இல்லை என்ற தகவல் பலகையையும் வைத்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் திடீரென கிழக்குக்கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் வங்கியை முற்றுகையிட்டு வங்கி ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தமாக மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் கூறுகையில் 

எப்போது சென்றாலும் பணம் இல்லை என்று சொல்லி வங்கி மேலாளர்  திருப்பி அனுப்பிவிடுகிறார்.இதனால் ஏழை மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.இப்படி இருக்கையில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் எப்போதும் பணம் கொடுத்தனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் அவர்களுக்கு மட்டும் பணம் எப்படி வருகிறது. பாரபட்சமாகசெயல்படும் வங்கி மேலாளரின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றார்.இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் கிழக்குக்கடற்கரைச்சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் தடைபட்டது.பின்னர் அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் அவர்களிடத்தில் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தைநடத்தியதையடுத்து ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பட விளக்கம்
அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் வங்கியில் பணம் வழங்காததைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
                           



                           










0 comment(s) to... “அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்துப்பாதிப்பு”