பேராவூரணியில் தேங்காய் மட்டை பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து.
Posted April 08, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி ஏப்ரல்-8;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஆவணம் சாலையில் உள்ள தேங்காய் உரிமட்டையில் இருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை மதியம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தொழிற்சாலை முற்றிலும் சேதமானது. தேங்காய் மட்டை பஞ்சு கட்டுகள் ஏற்றியிருந்த லாரியும் தீயில் எரிந்து சாம்பலானது.
பேராவூரணி ஆவணம் சாலை பகுதியை சேர்ந்தவர் வேலுத்தேவர் மகன் இராஜசேகர் (வயது 57). இவருக்கு சொந்தமான தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை ஆலங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் ( 6 ஏப்ரல் புதன்கிழமை) 2 ; 30 மணி வாக்கில் வேலை முடிந்து பணியாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென பற்றிய தீ, குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டை பஞ்சில் பற்றி எரியத் தொடங்கியது. இதில் கயறு தொழிற்சாலையும், பட்டுக்கோட்டை நாடி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மூட்டை ஏற்றப்பட்டு அருகில் நிறுத்தி இருந்த லாரியும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து வந்த பேராவூரணி, ஆலங்குடி, கீரமங்கலம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் தீ மேலும் பரவாதவாறு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அருகில் இருந்த வீடுகள், மர இழைப்பகம் ஆகியவை விபத்தில் இருந்து தப்பியது. சம்பவ இடத்தை பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்ட குழு உறுப்பினர் வி.கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, திமுக நகரச் செயலாளர் தனம் கோ.நீலகண்டன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அன்பழகன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
0 comment(s) to... “பேராவூரணியில் தேங்காய் மட்டை பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து.”