பட்டுக்கோட்டையில் மோசமான சுகாதார சூழல்

Posted August 29, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் சுகாதாரம் மிக மோசமாக உள்ளது என உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை நகர் மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் நடத்திய விவாதம்:
த. வெள்ளைசாமி: பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் அதிகரித்துள்ள நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
எம். செந்தில்குமார்: எனது வார்டில் குப்பைகள் அதிகமாக தேங்கும் பெரியக்கடை வீதி, வடசேரி சாலை, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய இடங்களில் மாதம் ஒருமுறை ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆர். ரவிச்சந்திரன்: செம்பிரான் குளம் பகுதியிலுள்ள மயானத்தை மின் மயானமாக மாற்ற வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் காலியாகவுள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும்.
பி.எஸ். பிரபு: எனது வார்டு இந்திரா நகரில் மழைநீர் வடிகால் வசதி செய்ய வேண்டும்.
பி.சி. ராஜேந்திரன்: கண்டியன் தெரு நகராட்சிப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
ஏ.ஆர். பரமேஸ்வரன்: ரயில் நிலைய சாலையில் மின் மயானம் அமைக்கும் பணியை துரிதமாக முடித்து, விரைவில் திறக்க வேண்டும்.
ஆணையர் (பொ) ரங்கராசு: இன்னும் 15 நாள்களில் பணிகள் நிறைவடைந்து மின் மயானம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
கோவி. ரவி: நகரில் தற்போது போடப்படும் தார்ச் சாலைகள் தரமானதாக இல்லை. நகரில் சுகாதாரம் மிக மோசமாகவுள்ளது.
முன்னதாக, பட்டுக்கோட்டை நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ. 25 கோடியை ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.நன்றி 



0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மோசமான சுகாதார சூழல்”