அதிரை அடுத்து ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் மதுஎடுப்பு திருவிழா...
Posted August 08, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
காலங்கள் மாறினாலும், எவ்வளவுதான் நாகரீக வளர்ச்சி வந்தாலும் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள் தனிமகிமை பொருந்தியதாகவும்
, அர்த்த முள்ளதாகவும் இருக்கும். இதனை நிரூபிக்கும் வகையில் ஆலங்குடி பகுதியில் ஆண்டுதோறும் நடந்துவரும் மதுஎடுப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது.
, அர்த்த முள்ளதாகவும் இருக்கும். இதனை நிரூபிக்கும் வகையில் ஆலங்குடி பகுதியில் ஆண்டுதோறும் நடந்துவரும் மதுஎடுப்பு திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கேற்ப இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கு ஆண்டுதோறும் தயாராகிவிடுவார்கள். தன் பசியைபோக்கி, குடும்பத்தை காப்பாற்றும் விவசாயத்திற்கு நன்றி சொல்லும் வகையிலும், மழையை பொழியவைக்கும் அம்மனை வழிபடும் வகையிலும் ஆடிமாதத்தில் நடைபெறும் விழாதான் மதுஎடுப்பு திருவிழா. விவசாய வீடுகளில் நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, அவரை, துவரை, பரங்கி, பாகை, பூசணி போன்ற விதைகளை பக்குவப்படுத்தி வைத்திருப்பார்கள். இவற்றை முளைக்கவைக்க கிராம பெரியவர்கள் உத்;தரவின்பேரில் தண்டோரா போட்டு முளைப்பாறி அறிவித்தவுடன் விதைகளை வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பாத்திரத்தில் எருவை போட்டு அதில் விதைகளை போட்டு தண்ணீர் தெளித்து வீட்டுக்குள்ளேயே வைத்து முளைக்கவைப்பார்கள். இது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் முக்கிய நிகழ்வாகும். ஒருவாரம் கழித்து அனைத்தையும் ஒருங்கிணைத்து பெண்கள் கும்மியடித்து அம்மன் பாடல்களை பாடி அந்த முளைப்பாரிகளை குளத்தில் கொட்டிவிட்டு செல்வார்கள் விதையின் முளைப்புத்திறனை தெரிந்துகொள்ளவும், மழைவேண்டி அம்மனை வழிபடவுமே இந்த வழிபாடு. அப்போது எந்தவிதையேனும் முளைக்காவிட்டால் அந்தவிதையை மாற்றிவிடுவார்கள். இதனை தொடர்ந்து ஒருவாரம் கழித்து நடப்பது மதுஎடுப்பு திருவிழா. குடத்தில் நெல்மணிகளை இட்டு அதில் தென்னம்பாளையை சொருகி இந்த தென்னம்பாளை போல் எங்கள் பயிர்களும் நன்கு வளர்ந்து விரியவேண்டும் என்று அம்மனை வேண்டி மலர்களால் அலங்கரித்து மதுக்குடத்தை பெண்கள் தலையில் சுமந்து வருவார்கள். இதேபோல இந்தஆண்டு ஆலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சம்புரான்பட்டி, கல்லாலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஆலங்குடி நாடியம்மனுக்கு மதுஎடுப்பு விழா நடத்தினர். இதனைதொடர்ந்து சுமார் 2 ஆயிரம்பெண்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களை சுமந்துவந்து நாடியம்மனுக்கு அபிஷேகம்செய்து வழிபட்டனர். மக்களின் நம்பிக்கை உண்மை என்பதை உணர்த்துவது போல பெண்கள் மதுக்குடங்களை சுமந்துவந்து கோவிலை அடையும்போதே திடீரென வானம் இருண்டு மழை பெய்து மக்களையும், மண்ணையும் குளிரச்செய்தது குறிப்பிடத்தக்கது. 
0 comment(s) to... “அதிரை அடுத்து ஆலங்குடி நாடியம்மன் கோவிலில் மதுஎடுப்பு திருவிழா...”