பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி நிதி உதவி

Posted August 13, 2014 by Adiraivanavil in Labels:
ஆக.13: பட்டுக்கோட்டை நகராட்சியின் பொன் விழா ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை அடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி வழங்கப்படும் என்று .முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்..
சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:-
பண்டைய சிற்பங்களுக்கும், பழமை வாய்ந்த கோயில்களுக்கும் பெயர் பெற்றதும், பெயரிலேயே வளத்தை பிரதிபலிப்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தின் தன்னிகரற்ற நகரமாக விளங்குவதும், காவேரி ஆற்றில் இருந்து பிரியும் கல்லணை கால்வாயில் அமைந்துள்ளதுமான பட்டுக்கோட்டை நகரம், 1.4.1965 அன்று நகராட்சியாக உருவாக்கப்பட்டு, பின்னர் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு பொன் விழாவினை கொண்டாட இருக்கிறது.
வரலாற்றுப் பாரம்பரியமும், சிறப்பும் கொண்ட இந்த பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், அமைந்துள்ளது. இந்த நகராட்சியில், 33 வார்டுகள், 73 கிலோ மீட்டர் சாலைகள், 2,883 தெரு விளக்குகள், 5 பூங்காக்கள், 21 ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன.
பட்டுக்கோட்டை நகராட்சி தொடங்கப் பெற்று 49 ஆண்டுகள் முடிவடைந்து, பொன்விழா ஆண்டான 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழா காணும் இத்தருணத்தில், அதன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட அரசிடம் நிதி கோரி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் இது குறித்து என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டுக்கோட்டை நகராட்சி தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது பெருமைக்குரிய அம்சமாகும். இந்தப் பெருமைக்கு உரிய நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி, சாலை மற்றும் வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குளங்களை சீரமைத்தல், பேருந்து நிலைய மேம்பாடு, அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சிறப்பு உதவித் தொகையாக 25 கோடி ரூபாயினை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதை இந்த மாமன்றத்திற்கு பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், பட்டுக்கோட்டை நகராட்சியைச் சார்ந்த மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி நிதி உதவி”