தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இதய துடிப்பை சீராக்கி குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்

Posted July 21, 2014 by Adiraivanavil in
தஞ்சை மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவும், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கமும் இணைந்து குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை குறித்த பயிற்சி முகாமை நடத்தின.
தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள
அவசர சிகிச்சை பிரிவில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் குழந்தைகள் நல டாக்டர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். 2 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சுதா, பாலமுருகன் தம்பதியருக்கு பிறந்து 2 நாளே ஆன ஆண் குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டதாக கொண்டு வந்து சேர்த்தனர்.இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல பிரிவு தலைவரும், இந்திய குழந்தைகள் நலப்பிரிவு தலைவருமான டாக்டர் சிங்காரவேலு, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் ராமச்சந்திரன், முன்னாள் பேராசிரியர் டாக்டர் தங்கவேல், குழந்தைகள் நல மருத்துவர் பூவழகி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் சாந்தி, டாக்டர் ஜனனி மற்றும் ராஜாமிராசுதார் மருத்துவமனை டாக்டர்களும் அந்த குழந்தையை பரிசோதனை செய்தனர். குழந்தைக்கு இதயதுடிப்பு பொதுவாக நிமிடத்திற்கு 100 முறை இருக்க வேண்டும். ஆனால் இந்த குழந்தைக்கு 250–க்கு அதிகமான முறை இதயதுடிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு எலக்ட்ரோ கார்டியோ வெர்ஷன் கருவி மூலம் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து இதயதுடிப்பு சீரான நிலைக்கு வந்து அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது.பின்னர் குழந்தையை காப்பாற்றப்பட்ட விதம் குறித்து பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும் டாக்டர்கள் விளக்கி கூறினர்.பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்கு டாக்டர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். இதில் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மயக்க மருந்தியல் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் முத்துக்குமரன், குழந்தைகள் நல மருத்துவர் பூவழகி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பயிற்சி அளித்த டாக்டர்கள் ராமச்சந்திரன், தங்கேவலு, சாந்தி, ஜனனி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப் பட்டன
.-நன்றி படம் செய்தி மாலைமலர்-


0 comment(s) to... “தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் இதய துடிப்பை சீராக்கி குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள்”