பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று நகை-பணம் கொள்ளை

Posted December 10, 2015 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 83). ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. இவருடைய மனைவி விஜயநிர்மலா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளார். மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் குணசேகரன் மட்டும் தனியே வசித்து வந்தார். நேற்று காலை குணசேகரனின் வீட்டுக்கு அவருடைய தங்கை மகள் ஜாய் சென்றார். அப்போது வீட்டுக்குள் குணசேகரன் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாய் கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே குணசேகரன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு குணசேகரன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

விசாரணை

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிச்சை, இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்பநாய் டாபி வந்து மோப்பம் பிடித்தது. மோப்ப நாய் குணசேகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். குணசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மிளகாய் பொடி 

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையாளிகள் குணசேகரனின் கண்களில் மிளகாய்பொடியை தூவி அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததும் பின்னர் அவர் அணிந்திருந்த கைச்செயின், 2 மோதிரங்கள் உள்பட 7½ பவுன் நகைகளையும், வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதனால் அவர் நகை- பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று மர்ம ஆசாமிகள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி dailythanthi


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று நகை-பணம் கொள்ளை”