தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஒரேநாளில் 108 வீடுகள் இடிந்து சேதம் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் ரெயில்நிலையம் வெறிச்சோடியது

Posted December 03, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஒரே நாளில் 108 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. மேலும் 6 பசுமாடு, 13 வெள்ளாடுகளும் மழைக்கு பலியாகின.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது. நள்ளிரவுக்குப்பின்னர் மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை லேசான தூறல் காணப்பட்டது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை காணப்பட்டது.

108 வீடுகள் இடிந்தன

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, அதிராம்பட்டினம், பாபநாசம், அய்யம்பேடடை, நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு, ஈச்சன்விடுதி, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி, குருங்குளம், பட்டுக்கோட்டை பகுதிகளில் பலத்தமழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழைக்கு ஒரே நாளில் மட்டும் 108 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதில் 9 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. 99 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்தன. மேலும் 6 பசுமாடுகளும், 13 வெள்ளாடுகளும் மழைக்கு பலியாகின.

தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் இதுவரை 60 பசுமாடுகள் பலியாகி உள்ளன. 2 காளை மாடுகள், 2 எருமை மாடுகள், 28 கன்று குட்டிகள், 122 வெள்ளாடுகள், 3 செம்மறிஆடுகள் பலியாகி உள்ளன. மேலும் 55 வீடுகள் இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்துள்ளன. மேலும் 722 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.

ரெயில் நிலையம் வெறிச்சோடின

தஞ்சை வழியாக சென்னைக்கும், சென்னையில் இருந்து தஞ்சை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. மேலும் நேற்று பகலில் தஞ்சை வழியாக சென்னைக்கு செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டன. மேலும் தஞ்சையில் இருந்து செல்லும் பயணிகள் ரெயிலும், தஞ்சை வழியாக செல்லும் பயணிகள் ரெயிலும் தாமதமாக வந்து சென்றன. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 28.7, கும்பகோணம் 8.6, பாபநாசம் 16.2, தஞ்சாவூர் 7, திருவையாறு 10, திருக்காட்டுப்பள்ளி 17.8, வல்லம் 9.5, கல்லணை 5.3, அய்யம்பேட்டை 20, திருவிடைமருதூர் 14, மஞ்சளாறு 14.6, பூதலூர் 10.8, வெட்டிக்காடு 20, ஈச்சன்விடுதி 26, ஒரத்தநாடு 25.8, மதுக்கூர் 51.8, பட்டுக்கோட்டை 32, பேராவூரணி 43, அணைக்கரை 15.2, குருங்குளம் 37.  


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஒரேநாளில் 108 வீடுகள் இடிந்து சேதம் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் ரெயில்நிலையம் வெறிச்சோடியது”