தொடர் மழையினால் 62 ஆண்டுகால கிணறு பூமிக்குள் இறங்கியது
Posted December 04, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்றுமுன்தினம் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்று காலை முதல் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான தூறல் காணப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வயல்களில் நெற்பயிர்கள் உள்ளதா? என தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் இதுவரை நேற்று முன்தினம் வரை 292 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தது. ஆனால் இது நேற்று அதிகரித்து 328 எக்டேரானது. ஆனால் இந்த வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. இதனால் இந்த பயிர்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை காணப்படுகிறது.
இது தவிர திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் மழைநீரில் தேங்கி பயிர்கள் அழுகியதன் மூலம் இதுவரை 64 எக்டேர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஞானஒளி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
கிணறு பூமிக்குள் இறங்கியது
தஞ்சையை அடுத்த குருங்குளம் மேற்கு ஊராட்சியில் உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் 1953-54-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் கிராம குடிநீர் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டது. சுமார் 60 அடி ஆழம் கொண்டதாக இந்த கிணறு இருந்தது. இந்த கிணற்று நீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக இந்த கிணறு பூமிக்குள் இறங்கியது. சுமார் 62 காலமாக இருந்த இந்த கிணறு திடீரென பூமிக்குள் இறங்கியதால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் காணப்படுகிறார்கள்.
மேலும் இந்த கிணறு சாலை ஓரத்தில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகிறார்கள். எனவே இந்த கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தஞ்சாவூர் 1, திருவையாறு 14, பூதலூர் 4, திருக்காட்டுப்பள்ளி 7.2, கல்லணை 1.8, ஒரத்தநாடு 1.8, நெய்வாசல் தென்பாதி 9, கும்பகோணம் 12, பாபநாசம் 13, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 28, மஞ்சளாறு 31.6, அணைக்கரை 15.4, பட்டுக்கோட்டை 1.
0 comment(s) to... “தொடர் மழையினால் 62 ஆண்டுகால கிணறு பூமிக்குள் இறங்கியது”