தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார்வரை ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பில் கடல்வழி பாலம்
Posted October 19, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
மன்னார்குடி,
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார்வரை ரூ.34 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி பாலம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி திடலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கர்னல் பி.பி.பாண்டியன் மற்றும் என்ஜினீயர் எஸ்.எஸ்.மோகன் தலைமையில் அவர்களது ஆதரவாளர்கள் 1,500 பேர் பா.ஜ.க.வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பேட்டை சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.கே.செல்வம், தேசியபொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, விவசாய அணி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவ.காமராஜ், சி.எஸ்.கண்ணன், துணைத்தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடி பதவி ஏற்று கொண்ட 1½ ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சென்னை, புதுச்சேரி உள்பட 13 மாவட்டங்களை இணைத்து ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி பாதையாக மாற்ற திட்டம் தீட்டி செயல்படுத்த உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இச்சாலையானது சுற்றுலா சாலையாக மாறி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். மேலும் கொல்கத்தா முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள 4 வழி சாலையானது விரிவாக்கம் செய்யப்பட்டு சென்னை வழியாக கன்னியாகுமரி வரை விரிவுப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கடல் வழி பாலம்
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை ரூ.34 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏழை–எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தின் மூலம் ரூ.16 ஆயிரம் கோடி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில் தேசியபொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவ.காமராஜ், சி.எஸ்.கண்ணன், துணைத்தலைவர் பரந்தாமன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நகர தலைவர் பால.பாஸ்கர் வரவேற்றார். முடிவில் ஒன்றிய தலைவர் வீர.மன்னவன் நன்றி கூறினார்.
0 comment(s) to... “தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார்வரை ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பில் கடல்வழி பாலம்”